இலக்கியப் பணியையே தனது தொழிலாக மேற்கொண்டு, திருமணம் செய்துகொள்ளாமல் ஓர் இலக்கியத் துறவியாகவே வல்லிக்கண்ணன் வாழ்ந்தார். இலக்கியத்திற்காக எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்ததால் வல்லிக்கண்ணனை “நவீன இலக்கிய ரிஷிகளில் ஒருவர்” என்று கா.சிவத்தம்பி கூறுவார். தன்னுடைய பதினாறாவது வயதில் எழுதத் தொடங்கிய வல்லிக்கண்ணன் எழுபதாண்டுகள் இடைவிடாது எழுதி தன்னுடைய 86ஆவது வயதில் மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் இவரது சொந்த ஊர்; இயற்பெயர் கிருஷ்ணசாமி. இரண்டையும் இணைத்துக் கொண்டு வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டார்.