தனது தந்தைக்குத் தெரியாமல் தனது பள்ளித் தோழனுடன் சேர்ந்து செய்த தவறுகள் அச்சிறுவனை உறுத்திக் கொண்ட இருந்தன. தான் செய்த தவறுகளுக்குத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தான் அச்சிறுவன். ஒரு காகிதத்தை எடுத்து மளமளவெனத் தான் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு, அதற்குத் தகுந்த தண்டனையைத் தருமாறு எழுதி முடித்தான். உடல்நலக் குறைவுடன் கட்டிலில் படுத்திருந்த தனது தந்தையிடம் அக்காகிதத்தை நீட்டினான். என்னவென்று புரியாமல் கடிதத்தை வாங்கி முழுவதும் படித்தார் அவன் தந்தை. தந்தையின் முகத்தில் கோபத்தை எதிர்பார்த்த சிறுவனுக்கு அதிர்ச்சி. தந்தையின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர். முகத்தில் ஒரு பரவசம். அவன் மன்னிக்கப்பட்டதாக அந்தப் பார்வை அவனுக்கு உணர்த்தியது. தவறுகளுக்குத் தண்டனை மட்டுமே தீர்வல்ல, மன்னிப்பும் ஓர் புனிதமான மாற்று வழி என்பதை அறிந்தான் அச்சிறுவன். இச்சம்பவம் தனது அகிம்சை அத்தியாயத்தின் முதல் பாடமாக அச்சிறுவனுக்கு அமைந்தது. அதுவே மோகன்தாஸ் என்னும் அச்சிறுவனை மகாத்மா காந்தி என்னும் நிலைக்கு உணர்த்தியது.