நாம் பிறந்தது முதல் வாழ்வு முடியும் வரை ஓய்வில்லாமல் இடைவிடாது துடித்துக்கொண்டிருக்கும் உடல் உறுப்பு இருதயம். இதயமானது சரியாகச் சொல்வதென்றால், தாயின் வயிற்றில் கரு உருவான முதல் 3 மாதங்களுக்குள்ளாகவே (இதை மருத்துவ மொழியில் (FIRST TRIMESTER) என்று குறிப்பிடுவோம்) வளர்ச்சி பெற்று விடுகிறது. எனவேதான் நமது பெரியவர்கள் அந்தக்காலத்தில் கர்ப்பிணிப்பெண்களைப் புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் ஒளிக்கதிர்கள் தாக்கி இதயம் வளர்வது தடைப்பட்டு விடும் என்ற அச்சப்பட்டார்கள். இது ஓரளவு அறிவியல்பூர்வமான விஷயமும் கூட. எக்ஸ்ரே, சிடி ஸ்கேன்போன்ற பரிசோதனைகள் தாய்க்கு கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டால் ,பிறக்கும் குழந்தை இதயக்கோளாறுகளுடன் பிறக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.