லெட்சுமணப்பெருமாள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் படந்தாள் கிராமத்தில் பிறந்தவர். ‘பாலகாண்டம்’, ’ஒட்டுவாரொட்டி’ எனும் சிறுகதைத் தொகுப்புகளையும், ‘வழிபடுகடாம்’, ‘புறப்பாக்கம்’ ஆகிய குறுநாவல்களையும் படைத்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். நாட்டுப்புறக்கதைகளை ’கரிசல்நாட்டுக் கருவூலங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். இவரின் கதைகள் மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது கி.ரா.வின் தொடர்ச்சிபோல் தோன்றும். ஆனால் அவரின் பாத்திரத் தேர்வும், அவர் சித்தரிக்க விரும்பும் வாழ்வின் பகுதியும், சமூக நிலையும் அவரை அந்தத் தொடர்ச்சியிலிருந்து வேறுபட வைக்கிறது. இதிலேயே அவரின் தனித்துவம் வெளிப்படுகிறது.