தமிழகத்தில் சமண துறவிகள் 84 மலைகளில் வாழ்ந்து, சமண சமய கொள்கைகளை பரப்பினர். அதில் சமண மலை என்று அழைக்கப்படும் ஒரே மலை, மதுரைக்கு மேற்கில் நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கீழக்குயில்குடி மலை ஆகும். இதன் பெயரே இம்மலையோடு சமணத்திற்கு உள்ள தொடர்பைக் குறிக்கும். இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமண சமயம் இம்மலையில் மிகச் சிறப்புடன் விளங்கியிருக்கிறது. இதற்குச் சான்றாக இம்மலையின் உச்சியில் உள்ள ஆடு உரிச்சான் பாறையில் தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது. இந்த கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு வாசகம், பெருந்தே ஊரைச் சேர்ந்தவர் குகைத்தளம் அமைத்து கொடுத்ததை தெரிவிக்கிறது.