சங்க காலத்திலிருந்தே நீர்நிலைகளை உருவாக்கி பாசனக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் பழந்தமிழ் மன்னர்கள் முன்னோடியாக இருந்தார்கள். பாண்டிய நாட்டின் சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு இங்குள்ள ஆறுகள், குளங்கள் குறிப்பிடத்தக்க முறையில் உறுதுணையாக இருந்துள்ளன. எனவே பாண்டிய மன்னர்கள் தமது தலைநகரான மதுரைக்குத் தண்ணீரைத் தந்த மாடக்குளத்தை அவ்வப்போது சீர்த்திருத்திப் பராமரித்து வந்துள்ளனர்.
மதுரைக்குப் பாசனக்குளமாக விளங்கிய மாடக்குளம் மதுரைப்பகுதியில் உள்ள பழமையான குளங்களில் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் மதுரையின் பாரம்பரிய அடையாளமாக திகழ்கிறது. தீவிர நகரமயமாதலின் விளைவாகப் பொன்மேனி, சம்மட்டிபுரம், சோமசுந்தரம் காலனிப் பகுதிகளில் இருந்த ஏராளமான நிலங்களுக்கு பாசனத்தைத் தந்து வந்த 2,800 ஏக்கர் நீர்ப்பரப்பும் 5 கி.மீ நீளமுள்ள கரையும், மூன்று பெரிய மடைகளையும், இரு கலிங்குகளையும் கொண்ட மாடக்குளம் அதன் பொலிவினை இழந்து கொண்டிருக்கிறது.