மதுரையிலிருந்து அழகர்கோயில் செல்லும் வழியில் உள்ள அப்பன்திருப்பதிக்கு அருகில் வெள்ளியங்குன்றம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் உள்ளது. மதுரையை ஆண்ட முதல் நாயக்க மன்னரான விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 - 1564), காலத்தில் எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளில் ஒன்றாக வெள்ளியங்குன்றம் பாளையம் விளங்கியுள்ளது. விசுவநாத நாயக்கர் அதனை இம்முடிகனகராமய்யக் கவுண்டருக்கு வழங்கியுள்ளார். அதன் பின்னர் ஜமீனாக மாறியது.
பாரம்பரியமிக்க வெள்ளியங்குன்றம் கிராமத்தில் கடந்த மாதம் நடந்த பாரம்பரிய நடைப் பயணத்தின்போது வரலாற்று, தொல்லியல் வல்லுநர்கள் முனைவர் வேதாசலம் மற்றும் முனைவர் சேதுராமன் ஆகியோர் கூறிய சரித்திர தொன்மை செய்திகள் வெள்ளியங்குன்றம் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் தற்போதைய ஜமீன் சண்முகராஜ பாண்டியனின் தந்தை புலிகேசி பங்கேற்று உரையாடியபோது இவ்வூரின் தொன்மை பன்முகத் தன்மை பறைசாற்றப்பட்டது.